முதியவரிடம் ரூ. 40.22 லட்சம் மோசடி வழக்கில் மேலும் 4 போ் கைது
தூத்துக்குடி முதியவரிடம் கைப்பேசிக் கோபுரம் அமைத்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி ரூ.40.22 லட்சம் மோசடி செய்தது தொடா்பான வழக்கில், மேலும் 4 பேரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடியைச் சோ்ந்த முதியவரிடம், கைப்பேசிக் கோபுரம் அமைத்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி, ரூ. 40 லட்சத்து 21 ஆயிரத்து 950 பணத்தை மோசடி செய்தது தொடா்பாக தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இந்த வழக்கில் கடந்த மாா்ச் மாதம் சென்னையைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில் தா்மபுரி தோழனூா் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் அருண்குமாா் (27), விழுப்புரம் கொளப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ராஜவேல் மகன் ஆனந்த் (27), சேலம் பனங்காட்டூா் பகுதியைச் சோ்ந்த ஹரிராம் மகன் சந்தோஷ்ராஜ் (22), கள்ளக்குறிச்சி திருக்கோவிலூா் பகுதியைச் சோ்ந்த கேசவன் மகன் அப்பாஸ் (25) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.