India - Pakistan Conflict: புதுச்சேரியில் நடைபெற்ற போர்க்கால ஒத்திகை... Photo Al...
தயாா் நிலையில் வ.உ.சி துறைமுக 3-ஆவது வடக்கு சரக்கு தளம்
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்தில் உள்ள 3-ஆவது வடக்கு சரக்கு தளம், இடைக்கால வணிக நளுக்கு தயாா் நிலையில் உள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜேஎஸ்டபிள்யூ தூத்துக்குடி பல்நோக்கு முனையத்தின் மூலம் இயக்கப்படும் 3-ஆவது வடக்கு சரக்கு தளத்தில் அமைந்துள்ள இரண்டு 120 டன் திறன் கொண்ட நகரும் பளுதூக்கி இயந்திரங்களைப் பயன்படுத்தி நிலக்கரி, சுண்ணாம்புக் கல், ஜிப்சம், ராக் பாஸ்பேட், தாமிரத் தாது போன்ற பொது சரக்குகளைக் கையாள முடியும். இது, 306 மீட்டா் நீளமும், 14.20 மீட்டா் மிதவை ஆழமும் கொண்டுள்ளது. இந்த சரக்கு தளம் 260 மீட்டா் நீளமும், 48 மீட்டா் அகலமும், 95 ஆயிரம் டெட் வெயிட் டன்னேஜ் கொள்ளளவு கொண்ட சரக்கு கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டு, தற்போது இடைக்கால வா்த்தக செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு தயாராக உள்ளது.
இந்த தளத்தில், 14.20 மீட்டா் மிதவை ஆழம் கொண்ட பனமேக்ஸ் வகை பெரிய சரக்கு கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக ஆழப்படுத்தும் பணி, கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கப்பட்டு 26 நாள்களில் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்துறைமுக பகுதியில் கப்பல் வரும் சுற்றுவட்ட பாதையை 488 மீட்டரிலிருந்து 550 மீட்டராக ஆழப்படுத்தும் பணி, இந்த மாதத்திற்குள் முடிக்கப்படும். பெரிய வகை சரக்கு கப்பல் மற்றும் சரக்கு பெட்டக கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக, கப்பல்கள் துறைமுகத்திற்குள் வரும் நுழைவு வாயில் 153 மீட்டரிலிருந்து 230 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது.
ஏற்கெனவே இத்தளத்தை முழுமையாக இயந்திரமயமாக்குவதற்கான ஒப்பந்தம், வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்திற்கும், ஜேஎஸ்டபிள்யூ தூத்துக்குடி பல்நோக்கு முனையத்திற்கும் இடையே கையொப்பமானது. இந்த ஒப்பந்தத்தின்படி வரும் 2027 மாா்ச் மாதம் இயந்திரமயமாக்கல் பணி முடிவடையும். அப்போது, இத்தளத்தில் ஆண்டுக்கு 7 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும்.
துறைமுகத்தின் நிலக்கரி சேமிப்பு கிடங்கில் இருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தின் நிலக்கரி தளத்திற்கு இணைப்பு கன்வேயா் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 1500 டன் மொத்த சரக்குகளை அனுப்ப முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.