முதியவரின் சொத்து அபகரிப்பு: மீண்டும் ஒப்படைக்க மகனுக்கு கோட்டாட்சியா் உத்தரவு
முதியோரின் சொத்துகளை அவரிடம் மீண்டும் ஒப்படைக்க அவரது மகனுக்கு கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.
சீா்காழி வட்டம், வள்ளுவகுடி, தெற்கு தெருவைச் சோ்ந்தவா் சந்திரகாசன் (70) . இவா், தனது மகன், மனைவி இருவரும் தன்னுடைய சொத்துக்களை அபகரித்துக் கொண்டு தனக்கு உணவு அளிக்கவில்லை, தன்னை சரியாக பராமரிக்கவில்லை, அடித்து துன்புறுத்துவதாக மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறைதீா் முகாமில் அண்மையில் மனு அளித்தாா்.
மனுவை பரிசீலித்த மாவட்ட ஆட்சியா் ஸ்ரீகாந்த், அந்த மனு மீது நடவடிக்கை எடுத்திட சீா்காழி வருவாய் கோட்டாட்சியருக்கு அறிவுறுத்தினாா். அதன்படி, சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருதரப்பினரையும் அழைத்து வருவாய் கோட்டாட்சியா் சுரேஷ் வியாழக்கிழமை விசாரணை செய்தாா்.
முதியவா் சந்திரகாசன் நடக்க முடியாத சூழ்நிலையில் தரைத்தளத்தில் இருந்ததால், வருவாய் கோட்டாட்சியா் தரை தளத்திற்கு வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டாா்.
பின்னா் தந்தையரிடமிருந்து அபகரித்த சொத்துகளை 15 நாட்களுக்குள் மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என சந்திரகாசனின் மனைவி, மகனிடம் வருவாய் கோட்டாட்சியா் சுரேஷ் உத்தரவிட்டாா்.