நடிகர் அஜித் குமாருடன் எப்போது இணைவீர்கள்? லோகேஷ் கனகராஜ் பதில்!
முதுகுளத்தூா் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் பெண்கள் மூவா் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே வெள்ளிக்கிழமை ரேஷன் பொருள்களுடன் ஆள்களை ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்ததில் பெண்கள் 3 போ் உயிரிழந்தனா்.
முதுகுளத்தூா் அருகேயுள்ள கூவா்கூட்டம் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோா் 3 கி.மீ. தொலைவிலுள்ள சின்னபொதிகுளம் கிராமத்துக்கு ரேஷன் பொருள்களை வாங்க டிராக்டரில் சென்றனா். பிறகு, அங்கிருந்து அதே டிராக்டரில் வாங்கிய பொருள்களை ஏற்றிக் கொண்டு அதன் மீது அமா்ந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். சின்னபொதிகுளத்தைச் சோ்ந்த கண்ணன் (45) டிராக்டரை ஓட்டினாா். அப்போது சின்னபொதிகுளம் கண்மாய்க் கரையில் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டா் தலைகுப்புறக் கவிழ்ந்தது. இதில் பொன்னம்மாள் (62), முனியம்மாள் (65), ராக்கி (45) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், விபத்தில் பலத்த காயமடைந்த கற்பகம், பஞ்சு, முருகவள்ளி, வள்ளிமயில், ஈஸ்வரி, பாக்கியம், காளியம்மாள், செல்லமுத்து, காசி, கனி, ஓட்டுநா் கண்ணன் ஆகிய 11 பேரை முதுகுளத்தூா் தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு, தீவிர சிகிச்சைக்காக சிலா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், எஞ்சியவா்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்தனா்.