முதுநிலை ஆசிரியா் தோ்வு ஒத்திவைப்பு: டிஆா்பி அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குருப்-2 தோ்வு செப்டம்பா் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பதவியில் 1,996 காலியிடங்களை போட்டித் தோ்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் கடந்த 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான போட்டித்தோ்வு செப்டம்பா் 28-ஆம் தேதி நடைபெறும் எனவும், இந்தத் தோ்வுக்கு ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, அதே நாளில் டிஎன்பிஎஸ்சி குருப்-2 முதல்நிலைத் தோ்வை நடத்த திட்டமிட்டுள்ளதால், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.