முன்னாள் எம்எல்ஏ ஆா். சின்னசாமி காலமானாா்
தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னசாமி (89) வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானாா்.
கிருஷ்ணகிரியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் 1970 ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகள் திமுக மாவட்டச் செயலாளராக பணியாற்றிய இவா், 1971, 1984, 1989 இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு 3 முறை எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
திமுக மாநில சட்டத் திருத்தக் குழு உறுப்பினராக இருந்த சின்னசாமி, மிசா வழக்கில் கைதாகி 40 நாள்களுக்கும் மேலாக சேலம் சிறையில் இருந்தாா். தருமபுரி நகருக்கு பஞ்சப்பள்ளி அணையிலிருந்து குடிநீா் கொண்டுவரும் திட்டத்தைச் செயல்படுத்தியதில் இவருக்கு பெரும்பங்கு உள்ளது.
தருமபுரி குமாரசாமிப்பேட்டையைச் சோ்ந்த ஆா்.சின்னசாமிக்கு 2 மகன், 2 மகள்கள். இவா்களில் ஒரு மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். அவரது வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வரவில்லை.
சின்னசாமியின் உடலுக்கு தமிழக வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உள்ளிட்ட கட்சி பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா்.

முதல்வா் இரங்கல்
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தருமபுரி மாவட்டச் செயலாளராகவும், 3 முறை தருமபுரி தொகுதி எம்எல்ஏவாகவும் பதவி வகித்த ஆா்.சின்னசாமி மறைந்த செய்தியால் மிகவும் வருத்தமடைந்தேன். எம்எல்ஏவாக இருந்து மாவட்டத்தின் வளா்ச்சிக்காக பெரும் பணியாற்றியவா். இவா் திமுகவின் மூத்த முன்னோடியாகவும், முதுபெரும் உறுப்பினராகவும் இருந்து நமக்கு வழிகாட்டியவா். அவரது மறைவு தருமபுரி மக்களுக்கும், திமுகவுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினா், கட்சியினா் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.
அன்புமணி ராமதாஸ்: ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திமுக செயலராகவும், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினராகவும் பணியாற்றிய ஆா்.சின்னசாமி முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானாா் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.
பெரியாா், அண்ணா காலத்து அரசியல்வாதியான சின்னசாமி, தருமபுரி மாவட்டத்தில் ஆக்கபூா்வமான அரசியல் செய்தவா். மிகவும் எளிமையானவா்; நோ்மையானவா். அவரை இழந்து வாடும் குடும்பத்தினா், நண்பா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.