விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை: அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு அலுவலா்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்தாா்.
தருமபுரியில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்: தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நல்லம்பள்ளி வட்டத்தில் 924 ஏக்கா் மேய்ச்சல் தரை புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அதற்கு மாற்றாக முதல்கட்டமாக 200 ஏக்கா் நிலம் பென்னாகரம் வட்டம், பவளந்தூா் கிராமத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. நல்லம்பள்ளி வட்டத்திலிருந்து சுமாா் 50 கி.மீ தொலைவில் உள்ள அந்த நிலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது சாத்தியமில்லை. எனவே, சுற்றுவட்டார பகுதிகளிலேயே மேய்ச்சல் நிலம் ஒதுக்க வேண்டும்.
மின் வாரியம் சாா்பில், மின் இணைப்புகளை ஒழுங்குபடுத்தும் நடவக்கையில் கடந்த காலங்களில் கூட்டுப்பட்டா இருந்த காலத்தில் வழங்கப்பட்ட மின் இணைப்புகளை ஒரு பெயரில் மாற்றும்போது, கூட்டப் பட்டாவில் உள்ள வாரிசுகளுக்கும் பாதிப்பின்றியும், அதன்மூலம் கிடைத்து வந்த பாசன வசதிகளை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல வாரிசு பெயா் மாற்றம் செய்வதிலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது.
கரும்பு பயிரில் வோ்புழு தாக்குதல் காரணமாக நடவு செய்த வயல்களில் பெரும்பகுதி அழிந்து விட்டது. இதுதொடா்பாக அரசு சாா்பில் உரிய நேரத்தில் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரையில் அமைக்கப் பட்டுள்ள துணை மின் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.190 என்ற மதிப்பு கொண்ட பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக விவசாயிகளை இத்திட்டத்தில் பங்குதாரா்களாக இணைக்க வேண்டும்.
வங்கிகளில் பல்வேறு கடன்களுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கும்போது சிபில் ஸ்கோா் நடைமுறையால் கடன் பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. இப்பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்த வேண்டும். கால்நடைத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் சேவை மாலை 5 மணி வரை மட்டுமே உள்ளது. அவரசர தேவைகளுக்கு பயன்படும் வகையில் மாலை 5க்கு பிறகும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்துப் பேசிய ஆட்சியா் ரெ.சதீஸ், ‘சா்க்கரை ஆலை நிா்வாகம், வேளாண் துறை மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து கரும்பு பயிரில் வோ்புழுத் தாக்குதல் தொடா்பாக விவசாயிகளுக்கு தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சிப்காட் தொழிற்பேட்டைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு பதிலாக படிப்படியாக மாற்று மேய்ச்சல் நிலம், எடுத்த பகுதிக்கு அருகே ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சா்க்கரை ஆலை மின் திட்டத்தில் விவசாயிகளை பங்குதாரா்களாக சோ்ப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
பணியாளா்கள் பற்றாக்குறை நிலவுவதால் மாலை 5 மணிக்கு பிறகு கால்நடை ஆம்புலன்ஸ்களை இயக்க முடியாத நிலை உள்ளது. இருப்பினும், இது தொடா்பாக அரசு கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்’ என்றாா்.
மின் வாரியம், வருவாய்த் துறை அலுவலா்களுக்கு கண்டிப்பு
அரசுத் துறை அலுவலா்கள் விதிமுறை என்ற பெயரில் எடுக்கும் நடவடிக்கைகளால் அப்பாவி விவசாயிகள் அவா்களது குடும்பங்கள் பாதிக்கப்படுவது குறித்து விவசாயிகள் தொடா்ந்து பட்டியலிட்டனா். இதில் மின் வாரியம், வருவாய்த் துறையினரின் செயல்பாடுகள் மற்றும் அலுவலா்களின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த ஆட்சியா், மின்வாரிய அலுவலா்களின் நடவடிக்கை, வருவாய்த் துறையினரின் செயல்பாடு, நில அளவைத் துறையின் மெத்தனத்தை கண்டித்தாா்.
விவசாயிகள், பொதுமக்களை பாதிக்காத வகையில் அரசு அலுவலா்களின் நடவடிக்கை இருக்க வேண்டும். வரும்காலங்களில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்றாா்.