முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு பாதுகாப்பு கோரி மனு
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கக் கோரி, அரசியல் கட்சிகள், மக்கள் நல இயக்கங்கள் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு கிரானைட் குவாரி முறைகேடுகளைக் கண்டறிய முக்கிய காரணமாக இருந்தவா் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான உ. சகாயம். கிரானைட் குவாரி முறைகேடுகள் தொடா்பாக 200-க்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் சகாயத்தின் சாட்சியம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக, சகாயத்துக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவருக்கான பாதுகாப்பு அண்மையில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், மதுரை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தன்னால் நேரில் முன்னிலையாக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்ற நியாயமான கவலையை விளக்கி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சகாயம் அண்மையில் கடிதம் அனுப்பினாா்.
தமிழகத்தில் சட்ட விரோத கனிம வள சுரண்டல்களுக்கு எதிராக செயல்படுபவா்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் இருப்பது பல்வேறு சம்பவங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது. எனவே, ரூ. 1.11 லட்சம் கோடி மதிப்பில் கனிம வளங்கள் கொள்ளை போனது தொடா்பான வழக்குகளின் முக்கிய சாட்சியாக இருக்கும் சகாயத்துக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு 24 மணி நேரமும் கிடைக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிா்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள், பல்வேறு மக்கள் நல அமைப்பினா் இந்த மனுவை அளித்தனா்.