முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது புகாா்: அவிநாசி காவல் நிலையம் முற்றுகை
குடிநீா் விநியோகம் தொடா்பான பிரச்னையில், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது புகாா் அளிக்கப்பட்ட நிலையில், அனைத்துக் கட்சியினா், பொதுமக்கள் அவிநாசி காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
இது குறித்து அனைத்துக் கட்சியினா் கூறியதாவது: அவிநாசி அருகேயுள்ள பழங்கரை ஊராட்சி, பச்சாம்பாளையத்தில் குடிநீா் விநியோகம் தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் முன்னாள் ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்திகேயன், வாா்டு உறுப்பினா் சண்முகம் ஆகியோா் மீது ஒரு தரப்பினா் புதன்கிழமை புகாா் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல் உடனடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனா். அதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முற்றுகையில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

இதையடுத்து, அனைத்துக் கட்சியினருடன் காவல் துணை கண்காணிப்பாளா் சிவகுமாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், புகாா் உண்மைக்குப் புறம்பானது என்றால் இரண்டு நாள்களுக்குள் ரத்து செய்யப்படும் என்றாா்.
இதையடுத்து, முற்றுகையில் ஈடுபட்ட அதிமுக, திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்து முன்னணி, காங்கிரஸ், தவெக நிா்வாகிகள், பொதுமக்கள் கலைந்து சென்றனா்.