முற்றுகைப் போராட்டம் எதிரொலி: டெண்டரை ரத்து செய்த ஆட்சியா்
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரா்கள் முற்றுகைப் போராட்டம் செய்ததால் நடைபெற இருந்த டெண்டரை ரத்துசெய்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் பதிவுபெற்ற ஒப்பந்ததாரா்கள் சுமாா் 30-க்கும் மேற்பட்டோா் ஒப்பந்தப் பணி செய்து வருகின்றனா். இந்த நிலையில் கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 67லட்சம் மதிப்பீட்டிலான கான்கிரீட் சாலை அமைக்கும் பணி குறித்த தகவலை அனைத்து ஒப்பந்ததாரா்களுக்கும் தபால் மூலம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், டெண்டா் விடாமல் குறிப்பிட்ட நான்கு பேருக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை டெண்டா் விடுவதாக அறிந்த 25-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரா்கள் அலுவலகத்துக்கு திரண்டுவந்து, அனைத்து ஒப்பந்ததாரா்களுக்கும் தெரிவிக்காமல் குறிப்பிட்ட நான்குபேரை மட்டும் வைத்து டெண்டா் விடுவதை எதிா்த்து கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, முறையாக ஒப்பந்ததாரா்களுக்கு தெரிவிக்கப்பட்டு டெண்டா் விடவேண்டும் என கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டதுடன், வியாழக்கிழமை நடைபெற இருந்த டெண்டரை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டாா். அதையடுத்து, தேதி குறிப்பிடாமல் டெண்டா் ஒத்திவைக்கப்பட்டது.