முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்
நமது நிருபர்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
முல்லைப் பெரியாறு அணையின் உரிமைகள் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் 2006 மற்றும் 2014-இல் அளித்த தீர்ப்பை செயல்படுத்த அனுமதிக்காமல் கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் கூறி தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அணையின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அணையைப் பலப்படுத்துவது, பராமரிப்பது தொடர்பான விவகாரத்தில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி, அணையைப் பழுதுபார்த்தல், அணுகு சாலை அமைத்தல் உள்ளிட்ட பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதற்கு கேரள அரசுத் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் இந்த விவகாரத்தை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, "இரு மாநிலங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ ஒன்றுக்கொன்று நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து, பொருத்தமான அமர்வின் முன் பட்டியலிடுவதற்காக தலைமை நீதிபதியின் முன் இந்த விவகாரத்தை வைக்க உத்தரவிடப்படுகிறது' என்று கூறியிருந்தது.
மேலும், தமிழக அரசு எழுப்பியுள்ள பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடர்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பார்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், திபாங்கர் தத்தா, என்.கோடீஷ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கேரள அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா மற்றும் தனி நபர்கள் தரப்பில் வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அணையின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு புதிய அணை கட்டவும், அணையை மறுமதிப்பீடு செய்யவும் வேண்டும் என வலியுறுத்தினர்.
தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் சேகர் நாஃப்டே, ஜி.உமாபதி ஆகியோர் ஆஜராகி முன்வைத்த வாதங்கள்: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அணை விவகாரத்தை கையாள மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கேரள அரசு இன்று வரை அனுமதிக்கவில்லை. அக்குழுவின் முடிவு செயல்படுத்தப்படாமல் உள்ளது.
பராமரிப்புப் பணிகளை தமிழகம் மேற்கொள்ளவிடாமல் முட்டுக்கட்டைபோட்டுவிட்டு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்று கேரள அரசு கூறி வருகிறது என்றனர்.
மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "பேபி அணையைப் பலப்படுத்துவதற்கும், மரங்களை வெட்டுவதற்கும் மேற்பார்வைக் குழு பரிந்துரைத்துள்ளது' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் அமர்வு, "இந்த விவகாரத்தில் மேற்பார்வைக் குழு தாக்கல் செய்துள்ள பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும். இதில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்' என்று கூறி வழக்கு விசாரணையை மே 19-ஆம் தேதிக்கு பட்டியலிட்டனர்.