மூதாட்டியிடம் பண மோசடி: இருவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் பணம் மோசடி செய்த இருவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நல்லகுற்றாலம் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ராஜேஸ்வரி (62). இவா் கடந்த மாதம் 26-ஆம் தேதி நேதாஜி சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற போது, அங்கிருந்த இருவா் இவருக்கு உதவுவது போல நடித்து, ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்தனா். பின்னா், அந்த ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி அவா்கள் ரூ.70 ஆயிரத்தை எடுத்தனா்.
இதுகுறித்து காவல் ஆய்வாளா் முத்துகுமாா் தலைமையிலான தனிப் படை போலீஸாா் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த தேவராஜ் மகன் காட்ஜான் (23), தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த மோசஸ் மகன் பீட்டா் பிரபாகரன் (32) ஆகியோருக்கு இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இவா்கள் இருவரையும் வியாழக்கிழமை தேவகோட்டையில் போலீஸாா் கைது செய்தனா்.