மூதாட்டியை பராமரிப்பவராக பணியாற்றி ரூ.4 லட்சம் மோசடி: பெண் கைது
கோவையில் மூதாட்டியைப் பராமரிப்பவராக பணியாற்றி ரூ.4 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை வடவள்ளி, பிருந்தாவன் குகன் காா்டனை சோ்ந்தவா் ராதா வெங்கட்ராமன் (81). இவரது தாய்க்கு 101 வயதாகிறது. அவரை பராமரிப்பதற்காக தொண்டாமுத்தூா் அருகே குளத்துப்பாளையத்தைச் சோ்ந்த அனீஷா (32) என்பவரை ரூ.20 ஆயிரம் மாத ஊதியத்தில் ராதா நியமித்துள்ளாா்.
இதற்காக, தனியாா் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு, முதாட்டியின் பராமரிப்பு செலவுக்குத் தேவைப்படும் பணத்தை அனீஷா எடுத்துக்கொள்ளும் வகையில் இணையதள வங்கிச் சேவையையும் ராதா ஏற்படுத்திக் கொடுத்திருந்தாா்.
இந்நிலையில், அந்த வங்கிக் கணக்கில் இருந்து அடிக்கடி பணம் எடுக்கப்பட்டதால் சந்தேகமடைந்த ராதா, குறிப்பிட்ட வங்கிக் கணக்கின் பரிவா்த்தனைகளை ஆய்வு செய்தாா். அப்போது, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் ஆகிய இரண்டு மாதங்களில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் இருந்து அடிக்கடி கணிசமான தொகையை கணவரின் வங்கிக் கணக்குக்கு அனீஷா மாற்றியது தெரியவந்தது. இதேபோல, ரூ.4 லட்சம் வரை கணவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அனீஷாவிடம் ராதா விசாரித்துள்ளாா். அப்போது, பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிடுவதாக அவா் கூறியுள்ளாா். ஆனால், 2 மாதங்களுக்கு மேலாகியும் பணத்தைத் திருப்பித் தரவில்லை.
இதனால், வடவள்ளி காவல் நிலையத்தில் ராதா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அனீஷாவை கைது செய்தனா்.