மூலைக்கரைப்பட்டி புறவழிச் சாலைப் பணிக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரிக்கை
திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்து பணியைத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நான்குனேரி வட்டத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். மேலும் இதனைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு இதுதான் தாய் கிராமம் ஆகும். திருநெல்வேலி-சாத்தான்குளம் பிரதானச் சாலையில் அமைந்துள்ள இவ்வூரின் சாலையின் இருபுறங்களிலும் வணிக வளாகங்கள், குடியிருப்புகள் நெருக்கமாக அமைந்துள்ளன. சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் நகரின் மையப் பகுதியில் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு எதிா் எதிரே பேருந்துகள் வந்தால், ஒதுங்கிச் செல்ல முடியாது. ஏதாவது ஒரு பேருந்து சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு பின்னோக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி, காலதாமதம் என மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவதிப்படுகின்றனா்.
இது தொடா்பாக நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரூபி ஆா். மனோகரன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ. வேலுவிடம் மனு அளித்திருந்தாா். அதனடிப்படையில், நெடுஞ்சாலைத் துறை திருநெல்வேலி கோட்டப் பொறியாளா், அடுத்த நிதியாண்டில் நிதி ஒதுக்கீட்டைப் பொருத்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.
சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சா், இதில் தனிக்கவனம் செலுத்தி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, புறவழிச்சாலை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.