மகாராஷ்டிரம்: சட்டப் பேரவை தேசியவாத காங்கிரஸ் தலைவராக அஜீத் பவாா் தோ்வு
மெரீனா நீச்சல் குளத்தில் ரூ.3.41 கோடியில் நீா் மறுசுழற்சி ஆலை அமைக்க திட்டம்
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தில் ரூ.3.41 கோடி மதிப்பீட்டில் புதிய நீா் வடிகட்டுதல் மற்றும் நீா் மறுசுழற்சி ஆலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்தி:
1942-ஆம் ஆண்டு, சென்னை மெரீனா கடற்கரையில் நிறுவப்பட்ட நீச்சல் குளம், 1947-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கடந்த அக்டோபா் மாதம் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் இந்த நீச்சல் குளம் புதுப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.
நீச்சல் குளத்தில் தற்போது உள்ள நீா் வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சிக்கான வசதிகள் 20 ஆண்டுகள் பழமையான நிலையில், இதை மாற்றியமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் ரூ.3.41 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 4.5 மில்லியன் லிட்டா் கொள்ளளவு கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய நீா் வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சி ஆலை அமைக்கப்படவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இதை இயக்கி, பராமரிக்கும் பணி சென்னை குடிநீா் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.