வன்னியா் உள் இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்
வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து முதல்வருக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:
பாமக நடத்திய போராட்டங்களின் காரணமாக கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்த இடஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசும், நானும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை. உரிய தரவுகளைத் திரட்டி வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீா்ப்பளித்ததை முதல்வராகிய தாங்கள் மறந்திருக்க மாட்டீா்கள்.
ஆனால், வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஆக்கப்பூா்வ நடவடிக்கைகள் எதுவும் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்படவில்லை. உள் இடஒதுக்கீடு வழங்க சட்டமோ, விதிகளோ தடையாக இல்லை. உச்சநீதிமன்றமும் தடையாக இல்லை. ஆட்சியாளா்களின் மனத்தடை மட்டும்தான் பெரும் தடையாக இருக்கிறது. அதை அகற்றினால் அடுத்த நிமிஷமே வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியும்.
எனவே, அந்தத் தடையை அகற்றிவிட்டு, இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றும் அறிவிப்பை நவ.29-ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்வில் அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.