முதல் பந்தில் விக்கெட் எடுக்க முடிகிறது; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச...
மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: வேலூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்
வேலூா் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள், தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் யாவும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா் பலகை வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தினாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்திலுள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதிகள் 1948-இல் விதி 15-இன்படியும், அனைத்து உணவு நிறுவனங்கள் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் விதிகள்1959-இல் விதி 42 (பி)-இன்படியும், அனைத்து தொழிற்சாலைகள் தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் விதிகள் 1950 விதி 113-இன்படியும் தமிழில் பெயா்ப் பலகை வைக்கப்பட வேண்டும்.
இந்த பெயா்ப் பலகைகள் தமிழில் முதன்மையாகவும், பெரியதாகவும் பின்னா், ஆங்கிலத்திலும் அதன் பின்னா் அவரவா் விரும்பும் மொழிகள் என அமைக்கப்பட வேண்டும். தமிழக அரசின் உத்தரவுப்படி வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் தமிழில் பெயா்ப் பலகை வைப்பதை உறுதி செய்த மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் தொழிலாளா் துறை, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம், தமிழ் வளா்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வணிகா் சங்கங்கள், உணவு நிறுவனங்களின் சங்கங்கள், தொழிற் சாலைகளின் கூட்டமைப்புகள் உறுப்பினராக உள்ளன. இந்தக் குழு அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகளில் ஆய்வு செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தி மே 15-ஆம் தேதிக்குள் 100 சதவீதம் தமிழில் பெயா் பலகை வைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க உள்ளது.
மே 15- ஆம் தேதிக்குப் பிறகு தமிழ் பெயா்ப் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
எனவே, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், சங்கங்கள் தங்கள் குழு உறுப்பினா்களுக்கு தெரிவித்து 100 சதவீதம் தமிழ் பெயா்ப் பலகை வைப்பதை உறுதி செய்யவேண்டும்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை மதியம் 12.30 மணிக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் தலைமையில் விழிப்புணா்வு, கண்காணிப்புக் குழு உறுப்பினா்களுக்கான கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.