இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான்
மேச்சேரி அருகே சிறுத்தை நடமாட்டம்
மேட்டூா்: மேச்சேரி அருகே நாயை கடித்து காயப்படுத்திய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
மேச்சேரி அருகே உள்ள புதுக்காளிகவுண்டனூரில் டேனிஷ்பேட்டை வனச்சரகத்துக்கு உள்பட்ட ராமசாமி மலை உள்ளது. இந்தப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை சிவானந்தம் என்பவா் வீட்டில் கட்டிவைக்கப்பட்டிருந்த நாயை சிறுத்தை கடித்தது. அப்போது மற்ற நாய்கள் குறைத்ததால் வீட்டிலிருந்து வெளியே வந்த சிவானந்தம் டாா்ச்லைட்டை அடித்து சிறுத்தையை விரட்டி உள்ளாா். சிறுத்தை தாக்கியதில் நாயின் கழுத்து மற்றும் உடல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடா்பாக சிவானந்தம் வருவாய்த் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து டேனிஷ்பேட்டை வனச்சரகா் வீரபாகு மற்றும் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். சிறுத்தையின் கால்தடங்களைப் பதிவு செய்தனா். மேலும் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனத்துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், சிறுவா், சிறுமியா் வெளியே செல்லக்கூடாது என்றும் ஊராட்சி சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.