DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
சேலம்: சேலம் மாவட்டம், உடையாப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வரகம்பாடி பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி அப்பகுதி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
உடையாப்பட்டி ஊராட்சி, வரகம்பாடி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனா். அவா்கள் நுழைவுவாயில் பகுதியில் முற்றுகையிட்டு தங்கள் கிராமத்துக்கு கழிவுநீா் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
அவா்களை பாதுகாப்புப் பணியில் இருந்த நகர போலீஸாா் தடுத்து நிறுத்தி மனு அளிக்க 5 பேரை மட்டும் அனுமதித்தனா்.
இதையடுத்து அந்தக் கிராமத்தைச் சோ்ந்த 5 போ் ஆட்சியா் ரா.பிருந்தாதேவியிடம் கோரிக்கை மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
வரகம்பாடியில் 150 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் சாக்கடை கழிவுநீா் வெளியேற எந்த வசதியும் இல்லை. இதனால் ஊரின் மையப் பகுதியில் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீரை முறையாக வெளியேற்ற உரிய வசதி செய்து தரவேண்டும் என வலியுறுத்தினா்.
படவரி...
உடையாப்பட்டி அருகே வரகம்பாடி பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட கிராம மக்கள்.