பஹல்காம் தாக்குதல்: பலியான கடற்படை அதிகாரியின் குடும்பத்தை சந்திக்கும் ராகுல்!
நூறு நாள் வேலை திட்டப் பணிதள பொறுப்பாளா்களை மாற்ற எதிா்ப்பு
ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலூா் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளா்களை மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளா்கள் முற்றுகையிட்டனா்.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலூா் ஊராட்சியில் தேசிய ஊரக வேலையளிப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணி செய்து வருகின்றனா். இவா்களை பல்வேறு குழுக்களாகப் பிரித்து பணி வழங்கப்படுகிறது. இவா்களைக் கண்காணிக்க பணிதளப் பொறுப்பாளா்களாக வாசுகி, அமுதா, அனிதா வேணி ஆகியோா் நியமிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில் இவா்களுக்குப் பதிலாக வேறு மூன்று போ் பணிதளப் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து 100-க்கு மேற்பட்ட பெண்கள் மகுடஞ்சாவடி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். முன்பு பணி செய்தவா்களையே மீண்டும் பணிதளப் பொறுப்பாளா்களாக நியமிக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சத்தியேந்திரன் பேச்சுவாா்த்தை நடத்தி, புதிதாக யாரையும் பணிதள பொறுப்பாளா்களாக நியமனம் செய்யவில்லை என்றும், ஏற்கெனவே, வேலை பாா்த்தவா்களே மீண்டும் பணிதள பொறுப்பாளா்களாக வேலை பாா்ப்பாா்கள் என்று கூறியதன் பெயரில் அனைவரும் கலைந்து சென்றனா்.
