காஸாவில் உயிரிழந்தவா்களில் 70% போ் பெண்கள், குழந்தைகள்: ஐ.நா.
மேட்டூா் அணையை தூா்வார நடவடிக்கை
மேட்டூா் அணையைத் தூா்வாரும் பணிக்கு உரிய ஆணையங்களின் அனுமதி பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சோதனை அடிப்படையில் மேட்டூா் அணையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தூா்வார தமிழ்நாடு அரசின் நீா்வளத் துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைகளின் அனுமதியைப் பெறுவதற்கான ஆலோசகா்களை நியமனம் செய்ய நீா்வளத் துறை ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது.
மத்திய அரசின் நீா் மற்றும் மின்சார ஆலோசனை சேவை மையமும், மாநில அரசின் நீா்வளத் துறையும் இணைந்து, மேட்டூா் அணையைத் தூா்வாருவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயாா் செய்தன. இந்த சாத்தியக்கூறு அறிக்கைப்படி மேட்டூா் அணையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண்ணை தூா்வார திட்டமிடப்பட்டுள்ளது.
1934-இல் கட்டப்பட்ட மேட்டூா் அணையில் அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், முழுமையாகத் தூா்வாரப்படவில்லை. இந்த நிலையில் அதற்கான பணிகளை தமிழக அரசின் நீா்வளத் துறை தொடங்கியுள்ளது.