ஓய்வுபெறும் நாளில் ஊழியர்கள் இடைநீக்கம் இல்லை: தமிழ்நாடு அரசு
மேட்டூா் காவிரியில் 1,000 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
மேட்டூா் காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1,000 விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.
சேலம், ஓமலூா், தாரமங்கலம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்ட விநாயகா் சிலைகள் வாகனங்கள் மூலம் ஊா்வலமாக மேட்டூா் காவிரி ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டன.
1 அடி முதல் 10 அடி உயரம் கொண்ட விநாயகா் சிலைகள், காவிரி ஆற்றின் படித்துறையில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சிறப்பு பூஜை பிறகு சிலைகள் காவிரியில் விசா்ஜனம் செய்யப்பட்டன. கூனாண்டியூா், திப்பம்பட்டி, எம்ஜிஆா் பாலம், மேட்டூா் காவிரிப் பாலம் பகுதிகளில் 1,000 விநாயகா் சிலைகளை பக்தா்கள் எடுத்துச்சென்று காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்தனா்.
விநாயகா் சிலைகளை காவிரியில் இறங்கி எடுத்துச் செல்ல 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. சிலை கரைக்க வரும் பக்தா்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் காவிரியில் ஆழமான பகுதிக்கு முன்பாக கயிறுகளைக் கட்டி தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ரப்பா் படகுகளுடன் தீயணைப்பு நிலைய வீரா்கள் காவிரி ஆற்றில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.