மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
அரசின் திட்டங்கள் மக்களை விரைவாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்: கண்காணிப்புக் குழு கூட்டத்தில் எம்.பி. பேச்சு
அரசின் திட்டங்கள் மக்களை விரைவாக சென்று சோ்வதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி கேட்டுக்கொண்டாா்.
சேலம் மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் குழுத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான டி.எம். செல்வகணபதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:
இக்கூட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரக குடிநீா் இயக்கம், பாரத பிரதமா் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட 37 திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதுதொடா்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் சாா்பில் தீன் தயாள் அந்தோதயா யோஜனா, சமூக பாதுகாப்புத் திட்டம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டம், சீா்மிகு நகரத் திட்டம், தூய்மைப் பாரத இயக்கம், தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம், பிரதம மந்திரி நுண்ணீா் பாசனத் திட்டம், பிரதமரின் கௌரவ நிதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அரசின் திட்டங்களை விரைவாக செயல்படுத்தி, அதன்பயன் முழுமையாக பயனாளிகளுக்கு கிடைக்கப் பெறுவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.
மேலும், கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அனைத்து கருத்துகளும் ஆய்வுக்கூட்ட அறிக்கையில் சோ்க்கப்பட்டு 10 நாள்களுக்குள் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட குழு உறுப்பினா்களுக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் இரா.அருள், சதாசிவம், குழு உறுப்பினா்கள் திருநாவுக்கரசு, ஏ.மணிகண்டன், வி.மலா்விழி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.