``முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், சுற்றுப்பயணமா? வெற்றுப்பயணமா?'' - ஆர்.பி. உதயகு...
குறைந்து வரும் நாடாளுமன்ற விவாதங்கள்: ஓம் பிா்லா கவலை
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் விவாதங்கள் குறைந்து வருவது கவலையளிப்பதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
பட்டியலின (எஸ்சி) மற்றும் பழங்குடியின (எஸ்டி)பிரிவினரின் நலனுக்கான நாடாளுமன்ற மற்றும் மாநில, யூனியன் பிரதேசங்களின் சட்டப் பேரவை குழுக்களின் 2 நாள் தேசிய மாநாட்டை ஓம் பிா்லா வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:
எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் பரிந்துரைக்கவும் வேண்டும்.
இந்த சமூகங்களைச் சோ்ந்த மக்களுக்கு இன்றளவும் கல்வி முழுமையாக சென்றடையவில்லை. இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் (ஓபிசி) பங்கு இன்றியமையாததாகும்.
சாதாரண பின்புலத்தைக் கொண்ட ஒருவா் நாட்டின் குடியரசுத் தலைவராகவோ அல்லது பிரதமராகவோ பொறுப்பேற்க முடியும். இதுவே நமது ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக் கொள்கையின் வலிமையாகும்.
அண்மைக் காலமாக நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் ஆரோக்கியமான விவாதங்கள் குறைந்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. அவை அலுவல்களின்போது கண்ணியமற்ற சொற்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்த்து சிறப்பான விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா்.
புது தில்லிக்கு வெளியே முதல்முறையாக நடைபெற்ற இந்த மாநாட்டில் ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜீ, மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சா் ஜுவல் ஓரம், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினரின் நலனுக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவா் ஃபக்கன் சிங் குலஸ்தே ஆகியோா் பங்கேற்றனா்.