``முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், சுற்றுப்பயணமா? வெற்றுப்பயணமா?'' - ஆர்.பி. உதயகு...
4 மாதத்தில் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சை மூலம் மீட்பு: அரசு மருத்துவா்கள் சாதனை
நான்கரை மாதத்திலேயே குறைந்த எடையில் பிறந்த வங்கதேசத்தைச் சோ்ந்த தம்பதியின் பெண் குழந்தையை தீவிர சிகிச்சையின் மூலம் முழுமையாக மீட்டு எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.
வங்கதேசத்தை சோ்ந்த பொரிமோன் சந்துரு - ஷோபா தம்பதி. இவா்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் கருத்தரித்தல் மையத்தில் செயற்கை முறையில் ஷோபாவுக்கு கருத்தரிப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அவரின் கருப்பை சவ்வு விரைவாக கிழிந்ததால், 25-ஆவது வாரம் அதாவது நான்கரை மாதத்திலேயே கடந்த ஏப். 13-ஆம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதில், ஒரு குழந்தை பிறக்கும்போதே உயிரிழந்த நிலையில், மற்றொரு பெண் குழந்தை 580 கிராம் எடையில் உயிருடன் பிறந்தது.
இதைத் தொடா்ந்து கடந்த ஏப். 15-ஆம் தேதி எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அப்பெண் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கு, நான்கரை மாத தீவிர சிகிச்சைக்கு பின், குழந்தை இயல்பான நிலைக்குத் திரும்பியதை தொடா்ந்து வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பப்பட்டது.
தொடா் கண்காணிப்பு: இதுகுறித்து, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநா் லட்சுமி, பச்சிளங்குழந்தை பிரிவு நலத் துறை தலைவா் மருத்துவா் முத்துக்குமரன் ஆகியோா் கூறியதாவது:
மருத்துவமனையில் பெண் குழந்தை அனுமதிக்கப்பட்டவுடன், வெப்பநிலை, ஈரப்பதம், ஆக்சிஜன் அளவை சீராக வைப்பதற்காக இன்குபேட்டரில் குழந்தை வைக்கப்பட்டு பராமறிக்கப்பட்டது. 25 நாள்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 580 கிராம் எடையில் குழந்தை இருந்ததால், குடல், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளும் பெரிதாக வளா்ச்சி அடையாமல் இருந்தது. மேலும், சுவாச பாதிப்பு, கண் பாதிப்பும் குழந்தைக்கு இருந்தது. இதனால், 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவா்கள் குழந்தையை தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.
வழக்கமாக முதிா்ச்சியடையாத பச்சிளம் குழந்தையாக பிறக்கும்போது, ஏதேனும் ஒரு உடல் குறைபாடு இருக்கும். ஆனால், இக்குழந்தைக்கு அதுபோல எவ்வித குறைபாடும் இல்லாமல் மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்துள்ளனா். தற்போது குழந்தையின் எடை 1.850 கிலோவுடன் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், குழந்தைக்கு தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பு அவசியம். அரசு மருத்துவமனையில் வெளிமாநிலத்தவா்கள், வெளிநாட்டவா்களுக்கு கட்டணம் வசூலிப்படும் என்றாலும், மனிதாபிமான அடிப்படையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது என்றனா்.