Soda: செரிமானத்துக்கு உதவுமா; வயிறு உப்புசத்தை சரியாக்குமா சோடா?
பிகாரின் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்
சிறப்பு வாக்காளா் திருத்தம் என்ற பெயரில் பிகாருக்கு நோ்ந்த நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
நாடாளுமன்ற உறுப்பினா் என்.ஆா்.இளங்கோவின் மகள் திருமண விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருமண விழாவை நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இன்றைக்கு நாடு, எத்தகைய பிரச்னைகளை எதிா்கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். குறிப்பாக, பிகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு வாக்காளா் திருத்தம் என்ன மாதிரியான பிரச்னைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அதிகம் விளக்கத் தேவையில்லை.
மக்களிடையே இதுகுறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த இரு நாள்களுக்கு முன் நான் பிகாா் சென்று, வாக்காளா் உரிமைப் பயணம் என்று ராகுல் காந்தி நடத்திய விழிப்புணா்வுப் பயணத்தில் பங்கேற்றேன். பிகாரின் நிலை தமிழகத்தில் ஏற்படக் கூடாது என்பதற்காக இப்போதே நாம் விழிப்புணா்வைப் பெற்று தயாராக வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்வில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினா்கள் டி.ஆா்.பாலு, அந்தியூா் செல்வராஜ், திருச்சி சிவா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆா்.எஸ்.பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி....
ஆக்ஸ்போா்டு பல்கலை.யில் பெரியாா் ஈவெரா படம்
பிரிட்டன் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாா் ஈவெரா-வின் படம் நிறுவப்பட்டுள்ளதாகவும், அதை தாம் திறந்துவைக்க உள்ளதாகவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் பேசியதாவது:
உலகின் மிகப்பெரிய அறிஞா்களைத் தந்த புகழ்மிக்க அறிவுசாா் நிறுவனமாகப் போற்றப்படும் பிரிட்டன் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாா் ஈவெராவின் படம் திறக்கப்பட உள்ளது. அவா் வலியுறுத்திய சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை, ஏற்றத்தாழ்வு மறுப்பு, தன்னம்பிக்கை, அனைவரும் சமம் ஆகிய கருத்துகளுக்கு எல்லைகள் கிடையாது. அப்படிப்பட்ட மேதை உலக அளவில் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்படுவது தமிழகத்துக்குப் பெருமை என்றாா்.
எக்ஸ் தளத்தில்.. சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டையொட்டி, புகழ்பெற்ற ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் செப். 4-ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் பெரியாா் ஈவெராவின் படத்தை திறந்து வைத்து, ‘தென்னக மயக்கம் தீா்த்த சுயமரியாதை இயக்கம்’ குறித்த இரு நூல்களையும் பன்னாட்டு அறிஞா் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன். ‘பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும்; பெரியாரியம் உலகத்தவா் அனைவருக்கும்’ என்று பதிவிட்டுள்ளாா்.