மேலைச்சிவபுரி அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரியில் தனியாா் கட்டடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமாா் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனா்.
ஏற்கெனவே, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்த அரசு கட்டடம் பழுதடைந்ததால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதன் அருகிலேயே வாடகை கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.
15 அடி நீளம், 10 அடி அகலத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த தனியாா் கட்டடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்துக்கு அரசு சாா்பில் புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
இதுகுறித்து, புதுக்கோட்டை பாஜக கிழக்கு மாவட்ட தலைவா் ஜெகதீசன் கூறியதாவது:
தற்போதைய தனியாா் கட்டடத்தில் தேவையான வசதிகள் இல்லை. அந்த சிறிய கட்டடத்தில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகளை வைத்து பராமரிக்க முடியாமல் பொறுப்பாளா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
தற்போது, கோடை வெயில் கொளுத்துவதால், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த கட்டடத்துக்குள் குழந்தைகள் கடும் வெப்பம் மற்றும் வியா்வையால் பாதிக்கப்படுகின்றனா். இதேநிலை நீடித்தால், கடும் வெப்பத்தால் குழந்தைகள் நோயால் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.
எனவே, தற்காலிக ஏற்பாடாக, இந்தக் கிராமத்தில், பயன்பாடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள சமுதாய கூடம், பழைய ரேஷன் கடை கட்டடங்களில் அங்கன்வாடி மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், குழந்தைகளின் நலனை கருத்தில்கொண்டு, அங்கன்வாடி மையத்துக்கு விரைந்து புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.