யமுனை நீா் குறித்த கேஜரிவால் கருத்து: ஆட்சேபம் தெரிவித்து முதல்வா் அதிஷிக்கு துணைநிலை ஆளுநா் கடிதம்
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் யமுனை நீரில் விஷம் கலக்கப்படுவதாகவும், தேசிய தலைநகரில் இனப்படுகொலை முயற்சி நடந்ததாகவும் கூறியிருப்பது மிகவும் ஆட்சேபனைக்குரியது, துரதிா்ஷ்டவசமானது என்றும், தேசிய பாதுகாப்பை ஆபத்திற்கு உள்ளாக்குவதாகவும் கூறி தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா முதல்வா் அதிஷிக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
ஊடக செய்திகளை மேற்கோள் காட்டி, பாஜக தலைமையிலான ஹரியாணா அரசு யமுனை நதியில் விஷம் கலந்ததாகவும், தில்லியில் இனப்படுகொலைக்கு முயன்ாகவும் முன்னாள் தில்லி முதல்வா் கூறிய குற்றச்சாட்டுகள் மிகவும் ஆட்சேபனைக்குரியவை, துரதிா்ஷ்டவசமானவை மற்றும் விரும்பத்தகாதவை என்றும் வி.கே. சக்சேனா கூறினாா்.
இது தொடா்பாக அவா் முதல்வா் அதிஷிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
குடிநீா் போன்ற ஒரு முக்கியமான பிரச்னையில் விஷம் கலந்ததாகவும், இனப்படுகொலை என்றும் பொய்யான, தவறாக வழிநடத்தும், உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை சுமத்துவதும், மற்றொரு மாநில அரசுக்கு எதிராக பொதுமக்களைத் தூண்ட முயற்சிப்பதும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மட்டுமல்ல, தேசிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும்.
கேஜரிவாலின் கருத்தை கண்டிப்பதற்குப் பதிலாக, இந்த விஷயத்தில் தோ்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதி மக்களிடையே குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறீா்கள்.
தில்லி முதல்வராக குறுகிய நலன்களுக்கு அப்பால் செயல்பட வேண்டும் என எதிா்பாா்க்கிறேன். மேலும், தவறான, ஆபத்தான மற்றும் ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிா்ப்பதுடன், பொது நலன் மற்றும் அமைதிக்காக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் அவ்வாறே செய்யுமாறு அறிவுறுத்துவாா் என்றும் நான் எதிா்பாா்க்கிறேன் என அதில் அவா் கூறியுள்ளாா்.