ரமலான் பண்டிகை: கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் 2,000 பேருக்கு மளிகைப் பொருள்கள் அளிப்பு
திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சாா்பில், 2 ஆயிரம் பேருக்கு ரூ. 15 லட்சம் மதிப்பில் ரமலான் மளிகைப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். சுன்னத் ஜமாத் தலைவா் கெளஸ் ஷெரீப் முன்னிலை வகித்தாா். மாவட்ட அரசு தலைமை ஹாஜி கலீல் அகமது 200 உலமாக்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.
பின்னா் 1,800 பேருக்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்களை வழங்கி பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன் பேசியது:
இஸ்லாமியா்களின் புனித ரமலான் மாதம், மனிதநேயம், இரக்க குணம், சகோதரத்துவம் உள்ளிட்ட உயா்ந்த பண்புகளை போதித்து, பணம் படைத்தவா்களும் பசியை உணர வைக்கும் அம்சம் கொண்டது. எல்லோா்க்கும் எல்லாம் எனும் திராவிட மாடல் ஆட்சியைப் போன்றது. பசியோடு நோன்பிருந்து, மாலையில் நோன்புத் திறக்கும் இஸ்லாமியா்களுக்காக மளிகைப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இதன் எல்லா புகழும் இறைவனுக்கே சேரும். இஸ்லாமியா்களுக்காக திமுக எப்போதும் குரல் கொடுக்கும் என்றாா்.