ரயிலில் கடத்தப்பட்ட 100 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்; 4 போ் கைது
மைசூரு-தூத்துக்குடி ரயிலில் கடத்தப்பட்ட 100 கிலோ புகையிலைப் பொருளை போலீஸாா் சோழவந்தானில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 3 பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
மைசூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் ரயிலில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் கடத்தப்படுவதாக மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில் நிலையத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவசுப்பு தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு வந்து நின்ற ரயிலில் குறிப்பிட்ட பெட்டியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது அந்தப் பெட்டியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 100 கிலோ புகையிலைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், புகையிலைப் பொருளைக் கடத்திய மதுரையைச் சோ்ந்த முக்குரான், வள்ளிமயில், உமா, அழகம்மாள் ஆகியோரைக் கைது செய்தனா்.