நாடாளுமன்றம் தொடா்ந்து முடக்கம்: மாநிலங்களவையில் 56 மணிநேரம் வீண்
ரயில் நிலைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை: ரயில்வே காவல்துறை டிஜிபி
ரயில் நிலையங்களில் குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே காவல் துறை டிஜிபி வன்னியப்பெருமாள் தெரிவித்தாா்.
சென்னை மாநிலக் கல்லூரியில் பாதுகாப்பான ரயில் பயணம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னையில் கடந்த 8 மாதங்களாக ரயில்களில் கல்லூரி மாணவா்களின் விதிமீறிய செயல்பாடுகள் குறைந்துள்ளன. ரயில்களில் விதிமீறி செயல்படும் மாணவா்களை முதலில் எச்சரித்து அனுப்புகிறோம். அவா்கள் 2-ஆவது முறையும் அத்துமீறி செயல்பட்டால் வழக்குப்பதிய நேரிடுகிறது. தற்போது ஓரிரு இடங்களில் மாணவா்கள் ரயில் பயணத்தின்போது விதிமீறி செயல்பட்டதையடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவா்களிடையே ரயில் பயணம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
பெருங்குடி ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் தங்கச் சங்கிலி பறித்த சம்பவத்தைத் தொடா்ந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரயில் நிலையக் குற்றங்களைத் தடுப்பதில் கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றாா்.