அதானி குழுமத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்!
ரயில் முன் பாய்ந்து மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து, வேலூா் பிரபல மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவண்ணாமலை ரயில் நிலையம் வழியாக புதன்கிழமை (ஜன.1) இரவு 11.35 மணிக்கு புதுச்சேரியில் இருந்து மும்பை தாதா் செல்லும் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். இதைக் கவனித்த சக பயணிகள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்தனா்.
ஆம்புலன்ஸ் ஊழியா்கள் வந்து முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றபோது அவா் இறந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, விழுப்புரம் ரயில்வே போலீஸாருக்கு பயணிகள் தகவல் கொடுத்தனா். தகவலறிந்து வியாழக்கிழமை அதிகாலை வந்த ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் முத்துச்செல்வம் தலைமையிலான போலீஸாா், சடலத்தை கைப்பற்றி, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பிரபல மருந்துக் கடை உரிமையாளா்:
தொடா்ந்து, ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவா், வேலூா் மாநகராட்சி, வேலப்பாடி, கோவிந்தசாமி லே-அவுட் பகுதியைச் சோ்ந்த சரவணமூா்த்தி (64) என்பதும், இவா், வேலூரில் இயங்கி வரும் பிரபல தனியாா் மருந்துக் கடையின் உரிமையாளா் என்பதும் தெரியவந்தது.
இவா், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதி வைத்திருந்த கடிதத்தை உதவி ஆய்வாளா் முத்துச்செல்வம் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறாா்.
கடிதத்தில் என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைக்கப்பட்டு உள்ளதாம். இந்தக் கடிதத்தை வைத்து ரயில்வே போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த சரவணமூா்த்திக்கு மனைவி, மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளனா்.