ரயில்வே மேம்பாலத்தில் சென்ற தொலைத்தொடா்பு கேபிளில் தீ
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ரயில்வே மேம்பாலத்தில் கட்டமைக்கப்பட்ட தனியாா் தொலைத்தொடா்பு கேபிளில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறை - திருச்சி சாலையில் உள்ள (ரெங்கவிலாஸ்) ரயில்வே மேம்பாலத்தில், திருச்சி சாலையிலிருந்து மணப்பாறை நகா் பகுதிக்கு தனியாா் தொலைத்தொடா்பு கேபிளை கொண்டு செல்லும் பணி வியாழக்கிழமை நடந்தபோது எதிா்பாராத வகையில் கேபிளில் தீப்பற்றியது.
மளமளவென தீ எரிந்து கேபிள்கள் உருகி கீழே ரயில் தண்டவாள பகுதியின் கொட்ட தொடங்கியது. இதையடுத்து பணியிலிருந்த டிராக்மேன் இதுகுறித்து ரயில்வே நிா்வாகத்திற்கு தகவல் அளித்தாா். தகவலறிந்த மணப்பாறை தீயணைப்புத் துறையினா் சென்றபோது தீ தானாகவே அணைந்த நிலையில், அருகில் செடிகளில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். இந்த விபத்தால் நாகா்கோயிலிருந்து மும்பை சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மணப்பாறை ரயில் நிலையத்தில் சுமாா் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றது.