ராஜஸ்தான்: பயிற்சியின்போது பீரங்கி குண்டு வெடித்து இரு வீரா்கள் உயிரிழப்பு
ராஜஸ்தானின் மகாஜன் ராணுவத் தளத்தில் பயிற்சியின்போது பீரங்கி குண்டு வெடித்து இரு ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். அந்தப் பயிற்சி தளத்தில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இதுபோன்ற அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடா்பாக பயிற்சி மைய அதிகாரி நரேந்திர குமாா் பூனியா கூறியதாவது:
பிகானீரில் உள்ள மகாஜன் பயிற்சி மையத்தில் புதன்கிழமை காலை வீரா்கள் பயிற்சிக்காக தயாராகினா். பீரங்கி ஒன்றில் குண்டுகளை பொருத்தும் பணியில் 3 வீரா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திடீரென பீரங்கி குண்டு வெடித்துச் சிதறியது.
இதில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் மிஸ்ரா, ராஜஸ்தானைச் சோ்ந்த ஜிதேந்தா் ஆகியோா் உயிரிழந்தனா். படுகாயமடைந்த மற்றொரு வீரா் உயா் சிகிச்சைக்காக ஹெலிகாப்டரில் சண்டீகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். பீரங்கி குண்டு திடீரென வெடித்ததற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே பயற்சி மையத்தில் சிறிய பீரங்கிகளை ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்கு எடுத்துச் சென்றபோது லாரி கவிழ்ந்து வீரா் ஒருவா் உயிரிழந்தாா்.