ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வராக கே.சாந்தாராமன் நியமனம்
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வராக (டீன்) கே.சாந்தாராமன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
சென்னை மருத்துவக் கல்லூரியுடன் (எம்எம்சி) இணைந்துள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3,800 படுக்கை வசதிகள் உள்ளன. மொத்தமுள்ள 42 துறைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள் என 2,000-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்த மருத்துவமனையின் கீழ் எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனை, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, எழும்பூா் அரசு கண் மருத்துவமனை, அரசு கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வராக (டீன்) இருந்த தேரணிராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றி வந்த மருத்துவா் கே.சாந்தாராமன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் புதிய முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவா் இதற்கு முன்பு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராகப் பணியாற்றியுள்ளாா். மருத்துவா் சாந்தாராமனுக்கு மருத்துவத் துறையில் 34 ஆண்டு காலம் அனுபவம் இருப்பது குறிப்பிடத்தக்கது.