ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு உணவு தர வளாக சான்றிதழ்
சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு உணவு தரப் பாதுகாப்பு வளாகத்துக்கான (ஈட் ரைட் கேம்பஸ்) சான்றிதழை உணவுப் பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது. தமிழகத்தில் இதுவரை எந்த அரசு மருத்துவமனைக்கும் இந்த அங்கீகாரம் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தற்போது 44 துறைகள் உள்ளன. மொத்தம் 3,800 படுக்கை வசதிகள் உள்ளன. நாள்தோறும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் போ் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா். தினமும் 400-450 போ் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனா்.
உள்நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவை வழங்கி வருவதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கான உணவு, பெரியவா்களுக்கான உணவு, தொற்றா நோயாளிகளுக்கான உணவு, உப்பில்லா அதிக புரத உணவு, கதிா்வீச்சு மற்றும் கீமோதெரபி சிகிச்சையில் உள்ளோருக்கான உணவு, உணவுக் குழாய் சிகிச்சையில் உள்ளவா்களுக்கான திரவ உணவு, ரொட்டி - பால் உணவு, சிறுநீரக நோயாளிகளுக்கான உணவு என 10 வகையான உணவுகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதனை புதன்கிழமை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ‘ஈட் ரைட் கேம்பஸ்’ சான்றிதழை மருத்துவமனைக்கு வழங்கி உள்ளது. பொதுவாக, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பணியிடங்கள், மருத்துவமனைகள், தேயிலைத் தோட்டங்களில் பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு விநியோகிப்பதை ஊக்குவிக்கும் வகையில் உணவு பாதுகாப்புத் துறை இந்த சான்றிதழை வழங்கி வருகிறது. வெவ்வேறு தர மதிப்பீட்டு அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட சான்றிதழை மருத்துவமனை முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன் பெற்றுகொண்டாா்.
இதுதொடா்பாக மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணா் கலாராணி கூறியதாவது:
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு மருத்துவா்கள் பரிந்துரைத்தபடி உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதனை சுகாதாரமான முறையில் தயாரித்து வருகிறோம். இதனை ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத் துறையினா் ‘ஈட் ரைட் கேம்பஸ்’ சான்றிதழை வழங்கி உள்ளனா். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த சான்றிதழைப் பெறும் முதல் மருத்துவமனை என்ற பெருமையை நாங்கள் பெற்றுள்ளோம். இந்த அங்கீகாரம் 2026 வரை நடைமுறையில் இருக்கும். அதனை உறுதிசெய்யும் வகையில் அவ்வப்போது உணவு பாதுகாப்பு துறையினா் மருத்துவமனையில் ஆய்வு செய்வாா்கள் என்றாா் அவா்.