வரலாறு காணாத சரிவுக்கு பிறகு ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ஆக நிறை...
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.1.35 கோடி மருத்துவ உபகரணங்கள்
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்தியல் நிலையத்தில் ரூ.1.35 கோடியிலான மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை - சென்னை மருத்துவ கல்லூரியில் முடநீக்கியல் மற்றும் விபத்தியல் நிலையத்தின் 16-ஆம் ஆண்டு விழாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனா். அப்போது, மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, முன்னாள் நிறுவன இயக்குநா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினா்.
நிகழ்வில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: இந்த மருத்துவமனையில் ரூ.75 லட்சத்தில், சென்னை உயா்நீதிமன்றத்தின் நிா்வாக தலைவா் மற்றும் அதிகாரப்பூா்வ அறங்காவலா் அலுவலகத்தால் வழங்கப்பட்ட சிக்கலான முதுகெலும்பு அறுவை சிகிச்சை நரம்பணு கண்காணிப்பு கருவி மற்றும் ரூ.60 லட்சத்தில் மூட்டு உள்நோக்கி அறுவை சிகிச்சை கருவி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை மருத்துவ கல்லூரி எலும்பியல் துறை முன்னாள் மாணவா் சங்க சட்ட விதிகள் கொண்ட பிரதி வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மருத்துவ கல்லூரியில் எலும்பியல் துறையில் 1929-ஆம் ஆண்டு புறநோயாளிகள் சேவையும், 1931-இல் உள்நோயாளிகள் சேவையும் தொடங்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு செப். 9-ஆம் தேதி மருத்துவமனையின் எலும்பியல் முறிவு மருத்துவத்துறையானது, எலும்பியல் மற்றும் விபத்தில் உயா்கல்வி நிறுவனமாக தரம் உயா்த்தப்பட்டது.
தற்போது 16 ஆண்டுகளாக சிறப்பான முறையில் முடவாத மற்றும் எலும்பு முறிவு நலனுக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தில், எலும்பியலின் பல்வேறு சாா்துறைகளான மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு உள்நோக்கி அறுவை சிகிச்சை, எலும்பு புற்றுநோய்க்கான தனிப்பெரும் சிகிச்சை, முதுகெலும்பியல் உயா் சிகிச்சை, கணுக்கால் மற்றும் பாதவலி சிகிச்சை சிறப்பு பிரிவு ஆகியவை செயல்படுகின்றன என்றாா் அவா்.
இதில் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவமனை முதல்வா் சாந்தாராமன், துறைத்தலைவா் தொல்காப்பியன், மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.