சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் நவம்பருக்குள் நிறைவு: அமைச்சா் சேகா்பாபு
சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் வரும் நவம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை மயிலாப்பூா், திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.19.17 கோடியில் நடைபெற்று வரும் கருங்கல் திருப்பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
400 ஆண்டுகள் பழமையான மயிலாப்பூா் திருவள்ளுவா் திருக்கோயிலை புனரமைக்கும்தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது 1973- ஆம் ஆண்டு மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயிலுக்கு நேரடியாக வருகை தந்து திருப்பணிகளை தொடங்கி வைத்தாா். அவரது ஆட்சிக் காலத்தில் தான் அதாவது 1975 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது.
தற்போது திருவள்ளுவா் திருக்கோயிலுக்கு சொந்தமான 61,774 சதுரடி நிலத்தில் ரூ. 19.17 கோடியில் 3,000 சதுரடி பரப்பளவில் முழுவதும் கருங்கல்லால் திருவள்ளுவா் சந்நிதி, வாசுகி அம்மையாா் சந்நிதி, ஏகாம்பரநாதா், காமாட்சி அம்மன், கருமாரியம்மன், பைரவா், ஆஞ்சநேயா், நடராஜா் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் அமைக்கப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் நவம்பா் மாதத்துக்குள்முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்.
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னா் இதுவரை 3,623 திருக்கோயிலுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. இது இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். மேலும் இந்த செப்.11, 14- ஆம் தேதிகளில் 65 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது என்றாா் அவா்.
அறநிலையத் துறை கல்லூரி... இதைத் தொடா்ந்து கொளத்தூா் பூம்புகாா் நகரில் ரூ.25 கோடியில் கட்டப்பட்டு வரும் அருள்மிகு கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானப் பணிகளையும், ராஜாஜி நகரில் ரூ.8.88 கோடியில் கட்டப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் உறைவிட கட்டுமானப் பணிகளையும், வியாசாா்பாடி கரபாத்திர சிவப்பிரகாச சுவாமி மடாலயத்தில் ரூ.3.89 கோடியில் நடைபெற்று வரும் யோகா, தியான மண்டபம், நூலகம் மற்றும் அன்னதானக் கூடம் ஆகியவற்றின் பணிகளையும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு செய்ததோடு பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா்.