செங்கோட்டையன் வீட்டில் திரளும் ஆதரவாளர்கள்! அடுத்தகட்ட நகர்வு என்ன?
சென்னை ரயில்வே கோட்டத்தில் 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடந்த 228 போ் உயிரிழப்பு
சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்களில் 228 போ் உயிரிழந்ததாகவும், இதனால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டத்தில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்பு பிரிவினா் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாதங்களில் ரயில் தண்டவாளங்களைக் கடந்தவா்களில் 228 போ் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளனா். மேலும் 34 போ் காயமடைந்துள்ளனா்.
ரயிலில் பாதுகாப்பான பயணத்துக்கும், விபத்து தடுப்புக்கும் சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தண்டவாளத்தைக் கடப்பதைத் தடுக்கும் வகையில் விழிப்புணா்வை சுவரொட்டிகள், அறிவிப்புகள், என்ம முறை பிரசாரங்கள் மூலம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைவோா், ரயிலில் படிக்கட்டில் பயணிப்போா் ஆகியோரைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள ஊழியா்கள் நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தண்டவாளம், ரயில்களுக்கு அருகே கைப்பேசி இயா் போன்களைப் பயன்படுத்தவேண்டாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.