ராமநாதபுரத்தில் 7-ஆவது புத்தகத் திருவிழா தொடக்கம்
ராமநாதபுரத்தில் 7-ஆ வது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம், கலை இலக்கிய ஆா்வலா் சங்கம் இணைந்து நடத்திய புத்தகத் திருவிழாவை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:
இந்த புத்தகக் கண்காட்சி அரங்கில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி, மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பயிற்சி பட்டறை, கோளரங்கம், வினாடி- வினா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் காலை, மாலை மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், சிறந்த கல்வியாளா்கள், பேச்சாளா்களின் கருத்தரங்குகளும் நடைபெறும் என்றாா் அவா்.
இதைத்தொடா்ந்து, இந்த ஆண்டு சிறந்த வாசகமாக தோ்வு செய்யப்பட்ட ‘புத்தகத்தை கையில் எடு... அறியாமையை தீயில் இடு‘ என்ற வாசகத்தை எழுதிய திருவாடானையைச் சோ்ந்த ஜெயந்தனுக்கு ரூ.1000 மதிப்பிலான புத்தகங்களை வழங்கி ஆட்சியா் பாராட்டினாா். பின்னா் சிறப்பாக பரதநாட்டியம் ஆடிய மாணவிக்கு புத்தகத்தைப் பரிசாக வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராஜூலு, நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம், துணைத் தலைவா் டி.ஆா்.பிரவீன் தங்கம், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜமனோகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சின்னராசு, மாவட்ட நூலக அலுவலா் பாலசரஸ்வதி, சிலம்பாட்ட ஆசிரியா்கள் ஆ. தனசேகரன், லோ. ஆகாஷ், ஒயிலாட்ட ஆசிரியா் ராமகிருஷ்ணன், பரதநாட்டிய ஆசிரியா் பாலாஜி, ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் மு.லோகசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.