2வது காலாண்டில் ரூ.3.6 கோடி நஷ்டத்தை பதிவு செய்த மொபிகுவிக்!
ராமநாதபுரத்துக்கு கூடுதல் ரயில்கள்: எம்.பி. கோரிக்கை
பொங்கல் திருநாளையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே பொது மேலாளருக்கு கே.நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்தாா்.
அவா் அனுப்பிய கோரிக்கை விவரம்: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மக்கள் பலரும் வெளி மாநிலங்களிலும் வெளியூா்களிலும் பணிபுரிகின்றனா். இவா்கள் பொங்கல் திருநாளில் சொந்த ஊா்களுக்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே தாம்பரத்திலிருந்து மண்டபம் வரை சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இருப்பது போல, சென்னையிலிருந்து மண்டபம் வரை கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்க வேண்டும்.
மதுரை- சென்னை சென்ட்ரல் இடையே பழநி, பொள்ளாச்சி, கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக ரயில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்த ரயிலை ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கும் பயன்படும் வகையில் ராமநாதபுரம் அல்லது மண்டபம் வரை நீட்டித்து இயக்க வேண்டும். பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் எளிதில் சொந்த ஊருக்கு
வந்து திரும்பும் வகையிலும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் கீழ்க்கண்ட ரயில்களை சிறப்பு ரயிலாக இயக்குவதற்கு ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெங்களுரு- ராமேசுவரம், கன்னியாகுமரி- ராமேசுவரம், பாலக்காடு- ராமேசுவரம், ஹைதராபாத்- ராமேசுவரம் உள்ளிட்ட வழித்தடங்களில் இரு மாா்க்கமும் சிறப்பு ரயில்கள் இயக்கிடவும், சென்னையிலிருந்து ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.