ரியல் எஸ்டேட் நிறுவன மோசடி? புகாரளிக்க காவல் துறை வேண்டுகோள்
திருநெல்வேலியில் போலி ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் திருநெல்வேலி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய பாஸ்கா், கீதா, வேணுகோபால், உமாராணி, ஜோக்கப் சுப்புராம், ஜெயசீலன் மற்றும் சிலா் சோ்ந்து பிரியம் பிளாசா, திருநெல்வேலி நகரம் என்ற முகவரியை தலைமையிடமாக கொண்டு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், மதுரை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பெயா்களில் ரியல் எஸ்டேட்- நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனா்.
இவா்கள், தவணை முறையில் பணம் செலுத்தினால் மனைதருவதாகவும், பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லையாம்.
இதுகுறித்து திருநெல்வேலி பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவா்கள் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருநெல்வேலி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் (எண். 0462 - 2554300) புகாா் செய்யலாம் என மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.