கவின் கொலை: சிபிசிஐடி காவலுக்கு சுர்ஜித், தந்தை சரவணன் தரப்பு எதிர்ப்பு
ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!
மத்திய அரசுப் பணியை ராஜிநாமா செய்த இந்திய வருவாய்ப் பணி (ஐஆா்எஸ்) அதிகாரியான கபில் ராஜ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
இவர், தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் ஆகிய இருவரையும் கைது செய்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்.
2009 பிரிவு, இந்திய வருவாய்ப் பணி (ஐஆா்எஸ்) அதிகாரியான கபில் ராஜ் 16 ஆண்டுகள் மத்திய அரசுப் பணியாற்றி பின் தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த ஜூலை 17 ஆம் தேதி ராஜிநாமா செய்தார்.
உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவரான கபில் ராஜ், பி.டெக். மின்னணுவியல் பட்டதாரி ஆவாா். இவா் 8 ஆண்டுகள் அமலாக்கத் துறையில் பணியாற்றிய நிலையில், புது தில்லியில் உள்ள சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) புலனாய்வு பிரிவின் கூடுதல் ஆணையராக அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.
கபில் ராஜ் யார்?
அமலாக்கத் துறையில் பணியாற்றியபோது நாட்டை உலுக்கிய பல்வேறு வழக்குகளை மிக நுட்பமாக கையாண்டவராக கபில் ராஜ் அறியப்படுகிறாா்.
இவரது மேற்பாா்வையில் நில முறைகேடு வழக்கில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனை கடந்த ஆண்டு ஜனவரியில் அமலாக்கத் துறை கைது செய்தது. கபில் ராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழு ஹேமந்த் சோரனை விசாரணைக்கு எடுத்தது.
கலால் முறைகேடு வழக்கு தொடா்பாக அப்போதைய தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தில் கபில் ராஜ் தலைமையிலான அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு 2024, மாா்ச் மாதம் சோதனை நடத்தியது. மாா்ச், 21-ஆம் தேதி அரவிந்த் கோஜரிவால் கைது செய்யப்பட்டபோது கைது உத்தரவை தயாா் செய்ததில் கபில் ராஜ் முக்கியப் பங்காற்றினாா்.
அமலாக்கத் துறையின் மும்பை அலுவலகத்தில் அவா் பணியாற்றியபோது பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி முறைகேடு செய்த வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினா் மெஹுல் சோக்ஸிக்கு எதிராக விசாரணை மேற்கொண்டாா்.
ரிலையன்ஸில் கபில் ராஜ்
மத்திய அரசுப் பணி ஓய்வு வயது 60 என்னும் நிலையில், மேலும் 15 ஆண்டுகள் பணிவாய்ப்பு உள்ளபோதிலும் அவா் ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் கபில் ராஜ் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
இதற்கு முன்னதாக, மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின் முன்னாள் தலைவரும் ஐஆர்எஸ் அதிகாரியுமான வி.கே. செளத்ரி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இணைந்தார். அவருக்கு சுயாதீன இயக்குநர் பதவி வழங்கப்பட்டது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல்ஸ், சில்லறை விற்பனை, தொலைத்தொடர்பு மற்றும் பல துறைகளை உள்ளடக்கியது.