இன்ஸ்டாகிராம் காதல், 26 பவுன் நகை பறிப்பு, சுற்றிவளைத்த போலீஸ்; மாணவியை மிரட்டிய...
நீதிபதி யஷ்வந்த் வா்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!
நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்டது.
இந்த விவகாரத்தில், ‘உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை செல்லுபடியாகாது என்று அறிவித்து, தன்னைப் பதவிநீக்கம் செய்வதற்கான பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரி, நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, ஏ.ஜி.மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி யஷ்வந்த வர்மா தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இதனிடையே, யஷ்வந்த் வர்மா தரப்பில், விசாரணைக் குழு பரிந்துரை மூலம் ஒரு நீதிபதியை நீக்குவது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக இன்று காலை உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அந்த உத்தரவில், “அப்போதைய தலைமை நீதிபதியும் விசாரணைக் குழுவும் செயல்முறையை கவனமாகப் பின்பற்றினர். புகைப்படங்கள் மற்றும் விடியோக்களைப் பதிவேற்றுவது அவசியமில்லை என்று கருதப்பட்டது, குறிப்பாக அந்த நேரத்தில் எந்த ஆட்சேபனையும் மனுதாரரால் எழுப்பப்படவில்லை.
பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு விசாரணை அறிக்கையை அனுப்புவது அரசியலமைப்புக்கு விரோதமானது அல்ல.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவரது அரசு இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா் அந்தப் பணம் மாயமானது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு, யஷ்வந்த் வா்மா இல்லத்தில் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா்.
இந்த சா்ச்சையைத் தொடா்ந்து, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்க 208 எம்.பி.க்கள் சாா்பில் நாடாளுமன்றத்தில் அண்மையில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலேயே நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.