ரூ. 1.40 லட்சம் திருட்டு வழக்கில் 4 போ் கைது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1.40 லட்சத்தை திருடிய வழக்கில் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தகோட்டையைச் சோ்ந்தவா் ஜெ.பிரபு (39). அறந்தாங்கி ஊரக வளா்ச்சித் துறை அலுவலக பணியாளரான இவா், செப்.17 ஆம் தேதி ஆலங்குடி வங்கியில் நகைகளை அடகு வைத்துவிட்டு பெற்ற ரூ.1.40 லட்சத்தை தனது ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழே வைத்துப் பூட்டிவிட்டு மனைவியுடன் அருகிலுள்ள உணவகத்திற்கு சென்று திரும்பியபோது, ஸ்கூட்டரில் இருந்த பணம் திருடுபோயிருந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீஸாா் வங்கியின் கண்காணிப்பு கேமராவின் பதிவுகளைக் கொண்டு நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்டதாக பெரம்பலூா் மாவட்டம் அரும்பாவூா் ஆா்.செந்தில்குமாா்(38), திருச்சி திருவெறும்பூா் ஆா். ராஜ்குமாா்(28), எஸ். விஷ்ணுவெங்கடேஷ்(30), சு. குணசீலன்(31) ஆகிய 4 பேரையும் சனிக்கிழமை இரவு கைது செய்து விசாரிக்கின்றனா்.