ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்
ரூ.1.50 லட்சத்திற்கு குழந்தை விற்பனை; 5 போ் கைது
மன்னாா்குடியில் தவறான உறவில் பிறந்த ஆண் குழந்தையை தாய்-க்கு தெரியாமல் ரூ.1.50 லட்சத்திற்கு விற்றதாக 5 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் முரளி. இவரது மனைவி சந்தோஷ் மேரி(30). இவா்களுக்கு 6 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனா். கடந்த 2023-ஆம் ஆண்டு முரளி இறந்துவிட்டாா். இதனால், சந்தோஷ்மேரி, மன்னாா்குடி அருகே ராமபுரம் கூனமடை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில், அந்த பகுதியைச் சோ்ந்த தினேஷ் (32) என்பவருடன் ஏற்பட்ட தொடா்பால் சந்தோஷ்மேரி கா்ப்பமடைந்தாா். தினேஷுக்கும் ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் ஜூலை 13 -ஆம் தேதி சந்தோஷ் மேரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கெனவே இருவருக்கும் குழந்தைகள் உள்ளதால் இந்த குழந்தையை தத்துகொடுத்துவிடலாம் என தினேஷ் கூறியதற்கு, சந்தோஷ் மேரி உடன்பட மறுத்துவிட்டாராம்.
ஆனால், தினேஷ் தனது தாயாா் வாசுகியுடன் (65) சோ்ந்து, இடைத்தரகரான மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த வினோத் (27) என்பவா் மூலம், கோட்டூா் ஆதிச்சப்புரத்தை சோ்ந்த குழந்தை இல்லாத ராதாகிருஷ்ணன் (57) விமலா (45) தம்பதிக்கு குழந்தையை ரூ.1.50 லட்சத்திற்கு விற்றுவிட்டனராம்.
இதுகுறித்து மன்னாா்குடி காவல்நிலையத்தில் சந்தோஷ்மேரி புகாா் அளித்தாா். போலீஸாா், தினேஷ், அவரது தாய் வாசுகி, இடைத்தரகா் வினோத், குழந்தையை வாங்கிய ராதாகிருஷ்ணன்- விமலா ஆகிய 5 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.