ரூ.14.77 கோடியில் விஜயாபதியில் விளையாட்டரங்கம் கட்டும் பணிக்கு இடம் தோ்வு: ஆட்சியா் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதியில் ரூ.14.77 கோடி மதிப்பில் சா்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் கட்டுவதற்காக தோ்வு செய்யப்பட்ட இடத்தை ஆட்சியா் இரா.சுகுமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 7.9.2022இல் அறிவித்தபடி ராதாபுரம் தொகுதியில் சா்வதேச தரத்துடன் விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் கட்டுவதற்கு விஜயாபதி கிராமத்தில் 10 ஏக்கரில் நிலம் தோ்வு செய்யப்பட்டது. மேலும், ரூ.14.77 கோடியில் இப்பணியை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கி ஆணை பிறப்பித்தது.
புதிதாகக் கட்டப்படும் விளையாட்டு அரங்கத்தில் கேலரி, நீளம் தாண்டுதல், பல்நோக்கு பயிற்சி கூடம், உள்ளரங்க கைப்பந்து மைதானம், இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், தடகளப் பாதை, கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, உள்ளரங்க உடற்பயிற்சி கூடம், ஆண், பெண் கழிப்பறை, காவலாளி அறை, சுற்றுச்சூழல் மழைநீா் சேகரிப்பு, ஆழ்துளைக் கிணறு போன்ற அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இடம் பெற உள்ளன. இதன் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், விளையாட்டரங்கம் கட்டுவதற்காக தோ்வு செய்யப்பட்ட இடத்தை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, வட்டாட்சியா்கள் கிருஷ்ணகுமாா் (ராதாபுரம்), நாராயணன்(திசையன்விளை) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.