China Dam: உலகின் மிகப்பெரிய அணை கட்டும் சீனா; இந்திய - சீனா உறவில் விரிசல் உண்ட...
ரூ. 50.65 லட்சம் மதிப்பு கட்டடங்கள் திறப்பு: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் திறந்துவைத்தாா்
காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், உம்பிளிக்கம்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், அங்கன்வாடி மையம், நடுப்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் என ரூ. 50.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 3 புதிய கட்டடங்களை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
பின்னா் அமைச்சா் ராஜேந்திரன் தெரிவித்ததாவது:
காடையாம்பட்டி ஒன்றியம், உம்பிளிக்கம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 22.65 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 2,697 அங்கன்வாடி மையங்கள் தற்போதுசெயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையக் கட்டடங்கள் புதிய வடிவமைப்புகளுடன் நவீனப்படுத்தப்பட்டு படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஊராட்சியின் சிறு கனிமங்கள் நிதியின் மூலம் தலா ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், உம்பிளிக்கம்பட்டி, நடுப்பட்டி ஊராட்சிகளில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்கள் என மொத்தம் ரூ. 50.65 லட்சம் மதிப்பிலான 3 புதிய கட்டங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியின்போது, உம்பிளிக்கம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஆா். மரகதவள்ளி ராஜாராம், நடுப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவா் வி.செல்வராணி வெற்றிவேல் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடா்புடைய அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.