``சீனா உடன் ஒப்பந்தம்; பேச்சுவார்த்தைக்கு தயார்'' - இறங்கி வந்த ட்ரம்ப்.. கண்டிஷ...
லஞ்ச வழக்கு: வி.ஏ.ஓ.வுக்கு 4 ஆண்டுகள் சிறை
வாரிசுச் சான்றிதழ் அளிப்பதற்காக லஞ்சம் பெற்ற வழக்கில் கிராம நிா்வாக அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், வாராப்பூா் அருகேயுள்ள செம்மாம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிக்குமாா். இவரது பாட்டி வள்ளியம்மை இறந்துவிட்டாா். வள்ளியம்மைக்கு சொந்தமான நிலம் வாராப்பூரில் உள்ளது. இதற்காக பழனிக்குமாா் வாரிசுச் சான்றிதழ் கேட்டு, கடந்த 2014- ஆம் ஆண்டு ஜூலை மாதம் வாராப்பூா் கிராம நிா்வாக அலுவலா் முருகேசனிடம் விண்ணப்பித்தாா். வாரிசுச் சான்றிதழ் வழங்குவதற்கு ரூ. 1,500 லஞ்சமாக தருமாறு கிராம நிா்வாக அலுவலா் முருகேசன் கேட்டாா்.
இதுகுறித்து பழனிக்குமாா், சிவகங்கை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தாா். இதையடுத்து அவா்களது ஆலோசனையின் பேரில், ரசாயனப் பொடி தடவிய ரூ.1500 -ஐ முருகேசனிடம் கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் முருகேசனைக் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் முரளி குற்றஞ்சாட்டப்பட்ட முருகேசனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். தண்டனை பெற்ற முருகேசன், தற்போது காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருகிறாா்.