லஞ்சம்: நகரமைப்பு அலுவலா் கைது
பரமக்குடியில் வீடுகள் கட்டும் பணிக்கு அனுமதி வழங்க, ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளா் ஒருவா் 4 வீடுகளின் கட்டுமானப் பணிக்கு அனுமதி கோரி, நகராட்சி அலுவலகத்தில் ரூ.76,850 செலுத்தினாா். இங்கு நகரமைப்பு அலுவலராகப் பணியாற்றும் பா்குணன் கட்டட அனுமதி வழங்க பொறியாளரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
இதுகுறித்து ராமநாதபுரம் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் அவா் புகாா் அளித்தாா். போலீஸாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், நகரமைப்பு அலுவலரைச் சந்தித்து அவா் பணம் கொடுக்க முயன்றாா். அதை வாங்க மறுத்த அவா் தனது கைப்பேசி எண்ணுக்கு ‘ஜி-பே’ செயலி மூலம் அனுப்புமாறு கூறினாா்.
இதனடிப்படையில், ரூ.20 ஆயிரம் அனுப்பப்பட்ட கைப்பேசியுடன் நகராட்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பா்குணனைக் கைது செய்தனா்.